RNI.NO.TNTAM/2012/32432

RNI.NO.TNTAM/2012/32432

குதிரை பேர வழக்கு: சென்னை காவல் நிலையத்தில் இன்று செந்தில் பாலாஜி ஆஜராகிறார்

சென்னை:
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தது. தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சிகள், விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் ஆதரவு அளித்ததை தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பதவி ஏற்றார். இக்கட்சிகள் மட்டுமின்றி, அதிமுகவில் இருந்தும் 25 எம்எல்ஏக்கள் ஆதரவாக வாக்களித்ததால், நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அரசு வெற்றி பெற்றது.
நம்பிக்கைத் தீர்மானத்தில் வெற்றி பெறுவதற்காக, எதிர்க்கட்சி எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க முயற்சிகள் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.இந்த சூழ்நிலையில், எதிர்க்கட்சிகள் தன்னிடம் குதிரை பேரம் நடத்தியதாக கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தொகுதி தவெக எம்எல்ஏ இளையராஜா பரபரப்பு தகவலை வெளியிட்டார்
பேரவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும்போது, அரசுக்கு எதிராக வாக்களித்தால் ரூ.35 கோடி தருவதாகவும், மறுத்தால் கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியதாகவும் சென்னை காவல் ஆணையர் அமல்ராஜிடம் கடந்த 29-ம் தேதி புகார் கொடுத்தார். இதன்பேரில் திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தி வந்த சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, அவருக்கு உதவியதாக கூறப்படும் தியாகராஜன், திருச்சி நரேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து சென்னையைச் சேர்ந்த செல்வன், சீனிவாசன், ராஜேஷ், கரூரைச் சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர்.
கைதான நரேஷை சென்னையில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் ஏற்கெனவே சந்தித்ததாகவும், செந்தில்பாலாஜி மற்றும் அசோக்குமாரின் ஆலோசனைப்படியே, எம்எல்ஏ இளையராஜாவை தொடர்பு கொண்டு திருநாவுக்கரசு பேரம் பேசியதாகவும் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆட்சியைக் கவிழ்க்கும் நடவடிக்கைகளுக்காக கார்ப்பரேட் நிறுவனம் மூலம் ரூ.180 கோடி வரை நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.
இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி, அவரதுசகோதரர் அசோக்குமாரும் வழக்கில் சேர்க்கப்பட்டனர். விசாரணைக்காக போலீசார் தீவிரமாக தேடியும், அவர்களது இருப்பிடம் குறித்து தெரியவில்லை. இதையடுத்து, திருவல்லிக்கேணி போலீசார் கரூர் மாவட்டம் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அவர்களது பூர்வீக வீட்டுக்குச் சென்று, அவர்களது தந்தை வேலுச்சாமியிடம் சம்மனை வழங்கினர்.
செந்தில்பாலாஜி, அசோக்குமார் ஆகிய இருவரும் சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஜூலை 6-ம் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு ஆஜராக வேண்டும் என்று சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருவரும் வெளிநாட்டுக்குச் சென்று விடாமல் தடுக்க, விமான நிலையங்களுக்கு ‘லுக்-அவுட்’ நோட்டீஸும் அனுப்பப்பட்டுள்ளது. இருவரும் இன்று விசாரணைக்கு ஆஜராகாவிட்டால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும், கைது நடவடிக்கைகளை முடுக்கிவிடவும் போலீசார் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.இந்த வழக்கில் மதுரையைச் சேர்ந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணா என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இதனால், கைதானவர்கள் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்துள்ளது. இவர் செந்தில் பாலாஜி தரப்பினர் மற்றும் ஏற்கெனவே கைதான திருநாவுக்கரசுக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.

Recent News

இந்திய பொருளாதார வளர்ச்சியை 6.4% ஆக குறைத்தது ஐ.நா.

இந்திய பொருளாதார வளர்ச்சியை…

புதுடெல்லி:மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஏற்பட்டுள்ள…

1 31 32 33