
சென்னை:
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மே மாதம் 3ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட்டது. அந்த தேர்வின் வினாத்தாள் கசிந்ததாக வெளியான புகாரையடுத்து, தேர்வு ரத்து செய்யப்பட்டு, இன்று மறுதேர்வு நடத்தப்படவுள்ளது. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், நீட் தேவையில்லை, மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர்கள் சங்கம் சார்பில், சென்னையில் நேற்று ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள், சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் ஆளுநர் மாளிகை நோக்கி செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இதனிடையே போலீசாருக்கும்- போராட்டக் காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட போது பெண் காவலர்கள் உட்பட 5 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது.