
திருவள்ளூர்:
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் கடல் உணவு பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு ஏற்பட்டத்தில் பலி 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம் பெரியபாளையம் அடுத்த கன்னிகைப்பேர் பகுதியில் இறால் உள்ளிட்ட கடல் உணவுப் பொருட்களை பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ‘செயின்ட் பீட்டர் அண்ட் பால் ஸீ ஃபுட்’ என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஜோசப் ஜெகன், மோகன் ஆகியோர் இதை நடத்தி வருகின்றனர். இங்கு இரவு, பகல் என 2 ஷிப்ட்களில் 200-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர்.
நேற்று காலை வழக்கம்போல சுமார் 120 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குளிர்சாதனப் பிரிவில் பயன்படுத்தப்படும் அமோனியா வாயு கசிந்துள்ளது. சில நிமிடங்களில் தொழிற்சாலை முழுவதும் வாயு பரவியதால் தொழிலாளர்களுக்கு மூச்சுத் திணறல், கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது.
இதில் 60 பெண்கள், 5 ஆண்கள் என மொத்தம் 65 தொழிலாளர்கள் மயக்கம் அடைந்தனர். சிலருக்கு வாய், மூக்கு, கண், காதுகளில் ரத்தக் கசிவும் ஏற்பட்டதால் பதற்றமான சூழல் உருவானது. பெரியபாளையம் போலீஸார், தீயணைப்புத் துறையினர், வருவாய்த் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மற்றும் பல்வேறு வாகனங்கள் மூலம் அருகே உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மிகவும் பாதிக்கப்பட்ட 7 தொழிலாளர்கள் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும், 9 பேர் ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனைக்கும் மேல் சிகிச்சைக்காக மாற்றப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண்ணும், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒரு பெண் என மூன்று பேர் உயிரிழந்தனர்.
இதனயைடுத்து திருவள்ளூர் அமோனியா வாயு கசிவு பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10-க்கும் மேற்பட்டோர் இன்னும் கவலைக்கிடமான நிலையில் உள்ளதால் பலி எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.