மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்த 24 வயதான பெண் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அவரது கணவர் விமானப்படை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். ஹஸ்ரத் மவுலானா என்பவர் முன்னிலையில் அப்பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக மதமாற்றச் சடங்குகளைச் செய்துள்ளார். இந்த அதிர்ச்சிகர சம்பவம் வீடியோவும் வெளியாகியுள்ளது.
இந்த சம்பவம் பற்றி அறிந்த அவரது கணவர், புகார் அளித்ததை அடுத்து இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. போலீஸார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நிலம் வாங்க விருப்பம் தெரிவித்து சம்பந்தப்பட்ட பெண்ணின் பள்ளி நண்பர் அய்யாஸ் தாஜ் மதாரே, என்பவர் தொடர்பு கொண்டு நேரில் சந்திக்க அழைத்துள்ளார்.
பிப்ரவரி 8-ம் தேதி ஒரு ஓட்டலில் நடந்த சந்திப்பின்போது, அய்யாஸ் அந்தப் பெண்ணுக்குக் கொடுத்த குளிர்பானத்தில் போதை மருந்து கலந்துள்ளார். போதை மருந்தால் பெண் மயங்கியதும் அவரை பாலியல் வன்கொடுமை செய்து அதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். அந்த காட்சிகளை சமூக வலை தளங்களில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி சுமார் ரூ.4 லட்சம் வரை ஏமாற்றியுள்ளார். இதற்கு அவரது நண்பர் அய்யாஸ் என்பவரும் உடந்தையாக இருந்துள்ளார். அந்தப் பெண்ணுக்கு பில்லி, சூனியம் செய்துவிடுவோம் என்றும் அவர்கள் மிரட்டியுள்ளனர். கடந்த மே மாதம் 31ம் தேதி அய்யாஸ், அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கல்மேஷ்வர் என்ற பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளனர்.
அங்கு ஹஸ்ரத் மவுலானா என்ற மதப் பெரியவர் முன்னிலையில், அந்தப் பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக வலுக்கட்டாயமாக மத மாற்றச் சடங்குகளைச் செய்துள்ளனர். இதையடுத்து அவரை, மிரட்டி அய்யாஸுடன் அவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, அய்யாஸ் தாஜ் மதாரே, அவரது கூட்டாளி அமீன் ஷேக் ஆகிய இருவரையும் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோதமாக இந்த திருமணத்தை நடத்தி வைத்த மவுலானாவை போலீஸார் தேடி வருகின்றனர்.
